சென்னையில் ஆன்லைன் டேட்டிங் செயலி மூலம் வாலிபரை ஓரினச்சேர்க்கைக்கு வரவழைத்து, கழுத்தில் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் மற்றும் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மூன்று பேரை காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், ‘டிண்டர்’ டேட்டிங் செயலி மூலமாக மாதவரம் பால் பண்ணை அருகே ஓரினச்சேர்க்கைக்காகச் சென்றுள்ளார். அங்கு தனியாக வந்த வாலிபரைச் சுற்றிய மர்ம கும்பல், கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி ஜிபே மூலம் ரூ.42,000 பணத்தைப் பறித்ததுடன், அவர் அணிந்திருந்த 2 சவரன் தங்கச் சங்கிலியையும் பறித்துத் தாக்கி விரட்டியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட வாலிபர் அளித்த புகாரின்பேரில் மாதவரம் பால் பண்ணை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். செங்குன்றம் சரக துணை ஆணையாளர் மகேஸ்வரியின் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்துத் தேடிய போலீசார், தாழை படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கீர்த்திவாசன் (28), மாதவரத்தைச் சேர்ந்த சந்தோஷ் (28), பெரம்பூரைச் சேர்ந்த ஆகாஷ் (27) ஆகிய மூன்று பேரைக் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.1,50,000 ரொக்கம், கடுக்கன், கைபேசி மற்றும் பட்டாகத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். 24 மணி நேரத்தில் குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறையினருக்குப் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
