ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கடற்கரையில் கடந்த 16-ஆம் தேதி இளைஞர் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் கன்னிராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சிலம்பரசன் (35) என்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து உடற்கூறாய்வு (பிரேத பரிசோதனை) செய்யப்பட்டதில், சிலம்பரசன் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் வீசப்பட்டது உறுதியானது. இந்த மர்ம மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
இந்தக் கொலை வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி மாவட்டம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்பவரைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், செல்வலிங்கம் என்பவரது தங்கையுடன் சிலம்பரசனுக்கு ஏற்பட்ட தகாத உறவு காரணமாக, கண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து சிலம்பரசனைத் திட்டமிட்டு கொலை செய்தது அம்பலமானது. இந்தக் கொடூரக் கொலையில் தொடர்புடைய மூன்று குற்றவாளிகளையும் காவல்துறையினர் நேற்று அதிரடியாகக் கைது செய்தனர்.
