இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பெண் வேடமிட்டு ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட நபரைக் கொலை செய்த வாலிபர் குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குஜராத்தைச் சேர்ந்த பியூஷ் (20) என்ற வாலிபருக்கு, சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலம் பூனம் என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் மலரவே, இருவரும் சேர்ந்து கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர். ஆனால், திருமணத்திற்குப் பிறகு விரதம் இருப்பதைக் காரணம்காட்டி, அந்தப் பெண் பியூஷுடன் உடல் ரீதியான நெருக்கத்தைத் தொடர்ந்து தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், தனது மனைவி வீட்டில் ரகசியமாக முகச்சவரம் (ஷேவிங்) செய்வதைப் பார்த்த பியூஷ் பேரதிர்ச்சி அடைந்தார். தீவிரமாக விசாரித்தபோது, பூனம் என்ற பெயரில் பெண்ணாக நடித்தவர் உண்மையில் பீகாரைச் சேர்ந்த சந்தன் என்ற ஆண் என்பதும், ஓரினச்சேர்க்கை உறவை விரும்பி அவர் பெண் வேடமிட்டதும் அம்பலமானது. இதனால் அவர்களுக்குள் கடுமையான தகராறு ஏற்பட்டு, பியூஷ் அவரைப் பிரிந்து சென்றார். இருப்பினும், சந்தன் விடாமல் உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் என பியூஷைத் துரத்திச் சென்று, இறுதியாக குஜராத்தின் ராஜ்கோட் நகரில் அவர் வேலை செய்யும் இடத்திற்கே சென்று தகராறு செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பியூஷ், பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி சந்தனை ஆள் நடமாட்டமில்லாத ரயில் தண்டவாளம் அருகே அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட வாக்குவாதத்தில், பெரிய கல்லை எடுத்து சந்தனைத் தாக்கிக் கொலை செய்துவிட்டு உடலை மறைத்துவிட்டு தப்பியோடினார். இரண்டு நாள்களுக்குப் பிறகு பெண்கள் ஆடையுடன் அழுகிய நிலையில் மீட்ட சந்தனின் உடலைக் கைப்பற்றிய போலீஸார், அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பியூஷைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
