உத்தரப் பிரதேச மாநிலம் பிளிபிட் பகுதியில், 23 வயதான பண்டி குமார் என்ற விவசாயி, தன் 18 வயது காதலிக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயமானதைத் தொடர்ந்து, கொடூரமான சதியில் ஈடுபட்டுள்ளார். கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிக்குக் காதலியை வரவழைத்த அவர், “நாம் இருவரும் ஒன்றாகத் தற்கொலை செய்து கொள்ளலாம்” எனக் கூறி, கழிவறையைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் ஆசிட்டை அந்தப் பெண்ணைக் குடிக்க வைத்துள்ளார்.
அந்தப் பெண் ஆசிட்டைக் குடித்தவுடன், தானும் குடிக்குமாறு கேட்டபோது, பண்டி குமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வலியால் அலறித் துடித்த அந்தப் பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டுப் பிளிபிட் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது ஆபத்தான கட்டத்தைக் கடந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெண்ணின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆசிட் வீச்சு மற்றும் காயப்படுத்துதல் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலிஸார், தலைமறைவாக இருந்த பண்டி குமாரை அதிரடியாகக் கைது செய்தனர்.
