தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக ஹார்ன் அடித்தும் கேட்காததால் ரயில் மோதிச் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி கொடூரமாகப் பலியான பதைபதைக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் பொல்லாரம் அருகே உள்ள ரயில்வே தண்டவாளப் பகுதியில் வாலிபர் ஒருவர் காதில் இயர்போன் மாட்டிப் பாட்டு கேட்டபடி தண்டவாளத்தை ஒட்டி ஆபத்தான முறையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அவருக்கு எதிரே அதிவேகமாக ரயில் ஒன்று வந்துள்ளது. தண்டவாளத்தில் நபர் நடந்து செல்வதைக் கவனித்த ரயில் ஓட்டுநர், அவரை எச்சரிப்பதற்காகத் தொடர்ச்சியாக உரத்த சத்தத்துடன் ஹார்ன் அடித்துள்ளார்.
ஆனால், காதில் இயர்போன் இருந்ததால் ரயிலின் எச்சரிக்கை ஹார்ன் சத்தம் அந்த நபருக்குக் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கண் இமைக்கும் நேரத்திற்குள் அதிவேகமாக வந்த ரயில் அந்த வாலிபர் மீது மிகக் கொடூரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அந்த நபர், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொடூர விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்களை உறைய வைத்துள்ள நிலையில், ரயில்வே போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
