ஆந்திரப் பிரதேச மாநிலம் விசியநகரம் மாவட்டம் கஜபதிநகரத்தில் இயர்போன் மாட்டிக்கொண்டு இரயில் தண்டவாளத்தை கடந்த 21 வயது இளைஞர், இரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்தார்.
விசியநகரம் மாவட்டம் பூரிட்டிபெண்டா கிராமத்தைச் சேர்ந்த பவன் கல்யாண் (21) என்ற இளைஞர், சென்னையில் தனது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, ஹைதராபாத்தில் வேலை தேடி வந்தார். தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், மீண்டும் புறப்படுவதற்காகக் கஜபதிநகரம் பகுதியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது அவர் காதில் இயர்போன் அணிந்திருந்ததால், பின்னால் வந்த இரயிலின் சத்தத்தைக் கவனிக்கத் தவறியுள்ளார். ஒரு தண்டவாளத்தில் வந்த இரயிலைத் தவிர்க்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக மற்றொரு தண்டவாளத்தில் வந்த இரயில் அவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த தலைக் காயமடைந்த அவர், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
