மும்பையைச் சேர்ந்த மோகித் சோனி என்ற இளைஞர், பழைய கார்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவர் மும்பை மீரா-பயந்தர் சாலையில் உள்ள பிளசண்ட் பார்க் சொசைட்டி அருகே, 15 ஆண்டுகள் பழமையான கார் ஒன்றை நிறுத்திவிட்டு, அதன் இருக்கையில் அமர்ந்து பரிசோதித்துக் கொண்டிருந்தார். அந்த காரை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வதற்காக அவர் ஆய்வு செய்தபோது, எதிர்பாராதவிதமாக இருக்கைக்கு அருகில் இருந்த ஏர்பேக் (Airbag) திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து வெளிவந்தது. மிக அதிவேகமாக விரிவடைந்த அந்த ஏர்பேக், மோகித் சோனியின் கழுத்தின் வலது பக்கத்தில் பலமாகத் தாக்கியது. இதில் கழுத்துப்பகுதியில் பலத்த காயமடைந்து காருக்குள்ளேயே அவர் மயங்கிக் கிடந்துள்ளார்.
அந்த வழியாகச் சென்றவர்கள் காரில் வாலிபர் மயங்கிக் கிடப்பதைக் கண்டு, அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், மோகித் சோனியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பயந்தரில் உள்ள பண்டிட் பீம்சென் ஜோஷி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஏர்பேக் தாக்கியதில் கழுத்துப்பகுதியில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள போதிலும், இந்த விபத்து மற்றும் மோகித்தின் துல்லியமான இறப்புக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
