ராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டம் சான்லேட்டி கிராமத்தைச் சேர்ந்த 25 வயதே நிரம்பிய ராம்ராஜ் மீனா என்ற வாலிபர், தனது நண்பர்களுடன் உற்சாகமாகக் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சற்றும் எதிர்பாராதவிதமாக அவருக்குக் கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு, திடீரென மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார்.
அவரது நிலையைக் கண்டு அதிர்ச்சியடைந்த நண்பர்கள், பதறியடித்துக்கொண்டு அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ராம்ராஜ் மீனா வழியிலேயே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாகக் கூறி அதிர்ச்சி தகவலைத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த ராம்ராஜ் மீனாவுக்குத் திருமணமாகி வெறும் 5 மாதங்களே ஆகிறது என்பதும், அவரது இளம் மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறித் துடிப்பதும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
