சென்னையில் காதல் திருமணம் செய்த ஒரு மாதத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மேற்கு தாம்பரம் திருவள்ளுவர் புறத்தை சேர்ந்த ஜபீத் டைட்டஸ் (25) என்பவர் மாதவரத்தை சேர்ந்த ரெபேக்கா (27) என்ற பெண்ணை காதலித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் பெண்ணின் பெற்றோருக்கு விருப்பமில்லை என தெரிகிறது. அதுமட்டுமல்லாமல் அந்தப் பெண் ஆங்கிலோ இந்தியன் சமூகத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ரெபேக்கா தன்னுடைய பெற்றோரை சமாதானப்படுத்தி விட்டு வருவதாக கூறி மாதவரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் போதையில் இருந்த ஜபீத், உன்னை மிஸ் செய்கிறேன் என்று மனைவியிடம் மொபைல் போனில் கூறியுள்ளார். பிறகு சிறிது நேரத்தில் அவருடைய மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. இதில் சந்தேகம் அடைந்த ரெபேக்கா தனது பெற்றோரை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது கணவர் ஜபீத் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான ஒரு மாதத்தில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
