மகாராஷ்டிர மாநிலம் வசாய் ரோடு ரயில் நிலையத்தில் நள்ளிரவில் போதை வாலிபர் ஒருவர் சக பயணியைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி, நள்ளிரவு நேரங்களில் ரயில்வே பாதுகாப்பு குறித்துப் பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
மும்பை புறநகர் ரயில்வேயின் வசாய் ரோடு ரயில் நிலையத்தின் 2-வது பிளாட்பாரத்தில் நள்ளிரவு நேரத்தில் வாலிபர் ஒருவர் மற்றொரு பயணியுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதிகளவில் மது அருந்தியிருந்த அந்த நபர், கண் இமைக்கும் நேரத்தில் சக பயணியைக் கொடூரமான முறையில் சரமாரியாகத் தாக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த வன்முறைச் சம்பவம் அங்கிருந்த சக பயணியால் வீடியோ எடுக்கப்பட்டுச் சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட நிலையில், வைரலாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவு நேரங்களில் ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் அலட்சியத்தையே இந்நிகழ்வு காட்டுவதாகப் பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர். நள்ளிரவில் ரயில் நிலையங்களில் போதை ஆசாமிகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே காவல்துறை உடனடியாகப் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வலுத்து வருகிறது.
