ஜார்க்கண்ட் மாநிலம் சராய்கேலா கர்சாவான் மாவட்டம் கம்ஹரியா பகுதியில், கணவருடன் ஏற்பட்ட தகராறு மற்றும் தாக்குதல் காரணமாகப் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் உதவி கோரி காவல்துறையை நாடினார். அண்டை வீட்டார் உதவியுடன் போலீசாரைத் தொடர்பு கொண்ட அவரை, காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று புகாரைப் பெற்றுக்கொண்டனர்.
இரவு நேரத்தில் அந்தப் பெண் காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஓர் அறையில் தங்க வைக்கப்பட்டார். அப்போது பணியில் இருந்த காவலர்களில் ஒருவர், அப்பெண் தங்கியிருந்த அறைக்குள் அத்துமீறி நுழைந்து அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். பாதுகாப்பு தேடி வந்த இடத்தில் நிகழ்ந்த இந்தச் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மறுநாள் பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட உயர் அதிகாரிகளிடம் முறையிட்டதை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டார். விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட காவலர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார்; மேலும் கடமை தவறியதாக காவல் ஆய்வாளர் உட்பட அங்கு பணியில் இருந்த 5 காவல்துறையினர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
