உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திராபுரம் ஜெய்பூரியா ஷோப்பிங் மாலுக்குள் இளைஞர் ஒருவர், பெண்ணைக் கொடூரமாகத் தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 4-ம் தேதி மாலை நடைபெற்ற இச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்றும், அவர்களுக்குள் ஏற்பட்ட தனிப்பட்ட கருத்து வேறுபாடே இந்த மோதலுக்குக் காரணம் என்றும் தெரியவந்துள்ளது. வாக்குவாதத்தின் போது அந்த இளைஞர் பெண்ணைக் கன்னத்தில் அறைந்ததோடு, தன் கையில் கூர்மையான கத்தியை வைத்துக்கொண்டு மிரட்டியுள்ளார்.
இச்சம்பவத்தைத் தடுத்து நிறுத்த முயன்ற மற்றொரு பெண்ணையும் அந்த இளைஞர் தள்ளிவிட்டு எச்சரித்துள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், காசியாபாத் இந்திராபுரம் காவல் துறையினர் உடனடியாக வழக்குப் பதிவு செய்து சம்பந்தப்பட்ட வாலிபரைக் கைது செய்தனர். அவரிடம் காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், பொது இடத்தில் அரங்கேறிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
