ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பான இபிஎஃப்ஓ, பிஎஃப் சந்தாதாரர்களின் வசதிக்காக புதிய வாட்ஸ்அப் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் உள்ள இருப்புத் தொகை, பணப் பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் பாஸ்புக் உள்ளிட்ட தகவல்களை எளிதாகத் தெரிந்துகொள்ள முடியும். இதற்காக அலுவலகங்களுக்குச் செல்லவோ, இணையதளத்தில் நீண்ட நேரம் காத்திருக்கவோ தேவையில்லை.
இந்தச் சேவையைப் பயன்படுத்த முதலில் +91 8796441800 என்ற இபிஎஃப்ஓ வாட்ஸ்அப் எண்ணை மொபைலில் சேமித்துக்கொள்ள வேண்டும். பின்னர் அந்த எண்ணுக்கு ‘Hi’ எனக் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் யுஏஎன் எண் மூலம் சரிபார்ப்பு நடைபெறும். இந்த நடைமுறை முடிந்ததும் பிஎஃப் இருப்புத் தொகையைப் பார்ப்பது, பாஸ்புக் பதிவிறக்கம் செய்வது உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்தலாம்.
இதற்கிடையே, புதிய வாட்ஸ்அப் சேவை தொடக்க நிலையில் இருப்பதால் சில பயனர்களுக்கு தொழில்நுட்பக் கோளாறுகள் மற்றும் பதில் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அனைத்து சேவைகளும் முழுமையாகச் சீராகும் வரை சந்தாதாரர்கள் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், செயலற்ற சில பிஎஃப் கணக்குகளுக்குத் தானியங்கி பணம் செலுத்தும் வசதியையும் இபிஎஃப்ஓ அறிமுகப்படுத்தியுள்ளது.
