சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகத்தில், சுவர்களில் பொருத்தப்பட்டிருந்த விலையுயர்ந்த பாத்ரூம் பைப் குழாய்கள் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பணத்தையோ அல்லது முக்கியமான ஆவணங்களையோ திருடாமல், பாத்ரூமிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த சுமார் 72 குழாய்களை மிக நிதானமாகக் கழற்றி சாக்குப்பையில் அள்ளிச் சென்றுள்ளனர். இந்தத் தொழிலில் கைதேர்ந்த ‘புரொபெஷனல்’ திருடர்கள்தான் தங்களது திறமையைக் காட்டுவதற்காக இந்த வினோதக் கொள்ளையில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்தத் திருட்டில் காங்கிரஸ் நிர்வாகிகளை மிகக் கடுமையாக அப்செட் ஆக்கிய விஷயம் என்னவென்றால், திருடர்கள் குழாய்களைத் திருடியதோடு மட்டுமல்லாமல், போகும்போது தரையில் “ஐ லவ் யூ” (I Love You) என்று எழுதி வைத்துவிட்டுச் சென்றிருப்பதுதான். இந்த அலுவலகத்தில் இதுபோன்று திருட்டு நடப்பது இது முதல் முறையல்ல, ஏற்கனவே இரண்டு முறை நடந்துள்ள நிலையில் தற்போது மூன்றாவது முறையாக இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது. திருடர்கள் எந்தவித பயமும் பதற்றமும் இன்றி நிதானமாக இந்தச் செயலில் ஈடுபட்டிருப்பதும், சவால் விடுவது போல தரையில் எழுதிச் சென்றிருப்பதும் போலீசாருக்கு விடுக்கப்பட்ட நேரடி சவாலாகவே பார்க்கப்படுகிறது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்ததும் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணா பதக் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தனது கடுமையான கண்டனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். நகரில் செயல்பட்டு வரும் போதைக்கு அடிமையானவர்கள் மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு இந்தத் திருட்டில் தொடர்பு இருக்கக்கூடும் என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். மேலும், காவல்துறையினர் இந்த வழக்கை அலட்சியப்படுத்தாமல், தங்களுக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கும் அந்தத் திருடர்களை உடனடியாகக் கண்டுபிடித்துக் கைது செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
