மகாராஷ்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் உள்ள வாக்ரி நகர் பகுதியில், ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வசித்து வந்தது. அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்குள் இக்குடும்பத்தினர் நுழையக் கூடாது என உள்ளூர் சாதி பஞ்சாயத்து ஏற்கனவே தடை விதித்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று அந்தக் கோவிலில் சிறப்பு விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போது, அக்குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தடையை மீறி கோவிலுக்குள் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், இரும்பு கம்பிகள் மற்றும் தடிகளுடன் அந்த இளைஞரின் வீட்டிற்குச் சென்று அங்கிருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் மீது கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து போலீசாரிடம் சென்றால் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
இந்த அராஜகம் இத்துடன் நின்றுவிடாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிப்பதற்காகச் சென்றபோது மேலும் தீவிரமடைந்தது. வழியிலேயே அவரை வழிமறித்த சில பெண்கள் அடங்கிய கும்பல், அந்தப் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து அரை நிர்வாணப்படுத்தியதோடு, கத்தரிக்கோலால் அவரது முடியையும் வெட்டியுள்ளது. அதைவிடக் கொடுமையாக, அவரது கழுத்தில் செருப்பு மாலை மாட்டி, சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்குச் சாலையில் ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். இந்த அவமானகரமான ஊர்வலத்தின் போது, வழியில் பார்ப்பவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுமாறும் அந்தப் பெண் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூரம் நடுரோட்டில் அரங்கேறிய போது, சுற்றியிருந்த பொதுமக்களில் யாரும் அதைத் தடுத்து நிறுத்த முன்வரவில்லை; மாறாக, பலர் தங்களது மொபைல் போன்களில் அதனை வீடியோவாக மட்டுமே எடுத்துள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் முதற்கட்டமாக 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய இரண்டு பெண்களைத் தற்போது அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
