ஹரியானா மாநிலம் பானிபட் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில், சாலை விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டுச் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட குட்டி தேவி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். எலும்பு முறிவுக்குச் சிகிச்சை அளிக்கக் குடும்பத்தினர் அழைத்து வந்த நிலையில், அவர்களின் எந்தவொரு அனுமதியுமின்றி மருத்துவர்கள் அவருக்குச் சட்டவிரோதமாக இதயத்தில் ஸ்டென்ட் வைக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தேவையற்ற சிகிச்சையின் காரணமாகவே அப்பெண் உயிரிழந்ததாகக் கூறி குடும்பத்தினர் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சிகிச்சைக்குப் பிறகு பெண் உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரது மகன், தங்களது அனுமதிப் படிவத்தில் போலி கையெழுத்திட்டு மருத்துவர்கள் இந்த மோசடியைச் செய்துள்ளதாகக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மருத்துவ அலட்சியம் மற்றும் உயிரிழப்பு குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் பரவியதும், சமூக வலைதளங்களில் பலரும் தங்களது பலத்த கண்டனங்களையும் கொந்தளிப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.
