லண்டனில் வசிக்கும் இந்தியப் பெண் ஒருவர், அங்குள்ள தேம்ஸ் நதியில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுவது குறித்து விமர்சித்து வெளியிட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நீலாஞ்சனா ஹசாரிகா வர்மா என்ற அந்தப் பெண், வெளிநாடுகளில் நமது பண்டிகைகளைக் கொண்டாடும் முறை குறித்துப் பேசி இணையத்தில் ஒரு புதிய விவாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளார்.
அந்த வைரல் வீடியோவில் தேம்ஸ் நதியையும் அதன் சுற்றுப்புறத்தையும் காட்டும் அவர், அந்தப் பகுதி எவ்வளவு தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். “இந்தத் தண்ணீரில் ஒரு சிறிய குப்பையோ அல்லது இலையோ கூட கிடையாது. ஆனால், நாமோ விநாயகர் சிலையை இந்த நதியில் வீசி இதையும் ‘புனிதம்’ செய்யப் போகிறோம். இது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது” என்று கிண்டலான தொனியில் விமர்சித்துள்ளார்.
வீடியோவின் கீழ் தனது உண்மையான நிலைப்பாட்டை விளக்கிய அவர், “நமது கலாச்சாரமும் மரபுகளும் மிகவும் அழகானவை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதே நேரத்தில் நாம் வசிக்கும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம். நாம் எங்கு சென்றாலும் நமது பண்டிகைகளைப் பொறுப்புணர்வுடன் கொண்டாட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலான பயனர்கள் இவரது சுற்றுச்சூழல் அக்கறையை ஆதரித்து வரும் நிலையில், ஒரு சிலர் வழிபாட்டு முறைகளைக் கிண்டல் செய்வதற்குத் தங்களது அதிருப்தியையும் பதிவு செய்து வருகின்றனர்.
