மஹாராஷ்டிரா மாநிலத்தின் துலே மாவட்டத்தில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் கொடூரமான முறையில் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துலே-சோலாப்பூர் நெடுஞ்சாலை அருகே உள்ள கரதாத் பாரி பகுதியில் பெண் ஒருவரின் எரிந்த உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, காவல்துறையினர் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். சுமார் 11 மணி நேர சிசிடிவி காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்த காவல்துறையினர், சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று அஹில்யாநகர் மாவட்டம் ஜம்கேடு பகுதியில் உள்ள சப்தசுர் கலாச்சார கலை மையத்திற்குச் சென்றதை நவீன தொழில்நுட்பப் பகுப்பாய்வு மூலம் துல்லியமாகக் கண்டறிந்தனர்.
விசாரணையில், பீட் மாவட்டம் அருகே ஏற்பட்ட உள் தகராறில் 31 வயதான பிங்கி ஹனுமந்த் என்ற கர்ப்பிணிப் பெண் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. தாக்குதலில் அவர் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இறந்துவிட்டதாகத் தவறாகக் கருதிய குற்றவாளிகள், உடலை மறைக்கச் சதித் திட்டம் தீட்டியுள்ளனர். அதன்பின்னர், மயக்க நிலையில் இருந்த அவரை காரில் சுமார் 275 கி.மீ தொலைவு கொண்டு சென்று, துலே பகுதியில் உள்ள ஆள்நடமாட்டமற்ற மலைப்பகுதியில் வைத்து பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துள்ளனர். இக்கொடூரச் சம்பவத்தில் தொடர்புடைய 4 நபர்களைக் காவல்துறையினர் உடனடியாகக் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் இருவரைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
