இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகும் அதிர்ச்சி தரும் தகவல்கள், பல நேரங்களில் மக்களின் பயத்தையும் ஆர்வத்தையும் மூலதனமாக கொண்டே பரப்பப்படுகின்றன. அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட கொடூர வெள்ளப்பெருக்கு உலகையே உலுக்கிய நிலையில், இதனைச் சான்றாகக் காட்டி “பாபா வங்கா கணித்த உலக அழிவு தொடங்கிவிட்டது” என்ற செய்திகள் வைரலாகி வருகின்றன. பல்கேரியாவைச் சேர்ந்த பார்வையற்ற தீர்க்கதரிசியான பாபா வங்கா 1996-லேயே மறைந்துவிட்ட போதிலும், 9/11 தாக்குதல் மற்றும் கொரோனா தொற்றைக் முன்கூட்டியே கணித்தவர் என்ற பிம்பம் அவர் மீது இருப்பதால், அவர் பெயரில் வெளியாகும் எந்தவொரு கணிப்பும் உடனடியாக சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுவிடுகிறது.
நடப்பு ஆண்டில் உலகம் முழுவதும் 7 முதல் 8 சதவீத பகுதிகள் இயற்கை சீற்றங்களால் அழியும், பயங்கர நிலநடுக்கங்கள் மற்றும் எரிமலை வெடிப்புகள் நிகழும் என்ற வதந்திகள் நேபாள வெள்ளப் பெருக்கோடு முடிச்சுப் போடப்பட்டு பரப்பப்படுகின்றன. இதுமட்டுமன்றி, தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து நடுத்தர மக்களின் பொருளாதாரம் சீர்குலையும், 3-வது உலகப் போர் வெடித்து உலக வங்கிகள் திவாலாகும், ரஷ்ய அதிபர் புடின் பதவியிலிருந்து விலகுவார், தைவான் மற்றும் தென் சீனக் கடல் விவகாரங்களால் உலக அரசியல் போர்க்களமாகும் போன்ற திகிலூட்டும் தகவல்களும் இதனுடன் சேர்க்கப்பட்டு பரப்பப்பட்டு வருகின்றன.
மேலும், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களை முழுமையாகத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து எஜமானனாக மாறிவிடும் என்றும், வரும் நவம்பர் மாதத்தில் பூதாகரமான விண்கலம் மூலம் ஏலியன்கள் பூமிக்கு வந்து மனிதர்களை நேரில் சந்திப்பார்கள் என்றும் விண்வெளி சார்ந்த பகீர் வதந்திகளும் இணையத்தில் தீயாகப் பற்றி எரிகின்றன. தொடர்ச்சியாக நடக்கும் இயற்கை பேரிடர்களும், உலக அரசியல் மாற்றங்களும் சாமானிய மக்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருப்பதால், இதுபோன்ற உணர்ச்சிப்பூர்வமான வதந்திகள் மிக வேகமாகப் பரவுவதற்குச் சாதகமான சூழல் உருவாகிவிடுகிறது.
இருப்பினும், இந்த அதிர்ச்சித் தகவல்களின் உண்மைப் பின்னணியை ஆராய்ந்தால், பாபா வங்கா உயிருடன் இருந்தபோது இத்தகைய விரிவான குறிப்புகளை எழுதி வைத்தாரோ அல்லது நேரில் கூறினாரோ என்பதற்கு எவ்வித அதிகாரப்பூர்வமான அல்லது முறையான சான்றுகளும் இல்லை. இயற்கை பேரிடர்களையும் உலக நிகழ்வுகளையும் பயன்படுத்தி, இணையத்தில் அதிக பார்வைகளையும் (views) கவனத்தையும் ஈர்ப்பதற்காகவே சிலர் உருவாக்கும் வாய்வழி கதைகளும், அடிப்படையற்ற வதந்திகளுமே இவை என்பதால், பொதுமக்கள் இதுபோன்ற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தும் செய்திகளை நம்பி பீதியடையத் தேவையில்லை.
