கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஹத்தரவாடா கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணா பாட்டீல் என்ற கூலித் தொழிலாளி, தனது மனைவி மஞ்சுளா நைட்டி அணிவதற்கு நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். சம்பவத்தன்று கணவனின் தடையை மீறி மஞ்சுளா நைட்டி அணிந்ததால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா, அவர் மீது தீ வைத்துள்ளார். மஞ்சுளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு பெலகாவி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இந்தத் தம்பதியிடையே, ஆடை விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து வாக்குவாதங்கள் நடந்து வந்துள்ளன. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மஞ்சுளா தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பேரில் நந்த்கட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மனைவியின் தனிப்பட்ட விருப்பத்தையும், ஆடை சுதந்திரத்தையும் ஏற்காத கணவனின் இந்த வெறிச்செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கணவனைப் பிடிக்கவும், இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணை நடத்தவும் காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
