கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண்ணின் தோற்றம் குறித்து அவமரியாதையாகப் பேசியதுடன், அவரது சகோதரியைப் பற்றியும் தவறான கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணின் குடும்பத்தினர், இளைஞரைத் தங்களது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு அறையில் அடைத்து வைத்துத் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், பெண்ணின் உறவினர்கள் இளைஞரை மண்டியிடச் செய்து அறைவதும், அவரது அநாகரீகமான பேச்சைக் கண்டித்து வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது. சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து முறையான புகார் எதுவும் இதுவரை அளிக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இருப்பினும், ராய்ச்சூர் சதர் பஜார் காவல்துறையினர் இந்த வைரல் வீடியோவை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களிடம் அத்துமீறுவதும், அதற்குத் தண்டனையாகத் தனிநபர்களே தாக்குதலில் ஈடுபடுவதும் அப்பகுதியில் விவாதத்தை உண்டாக்கியுள்ளது.
