தமிழகத்தில் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ ₹2,000 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, இந்த கூடுதல் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இத்திட்டத்தின் கீழ் மாதம் ₹1,000 பெற்று வரும் 1.31 கோடி பயனாளிகளுக்கும் இந்த உயர்த்தப்பட்ட ₹2,000 தொகை நேரடியாகக் கிடைக்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டத்தில் இணைந்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய நிதியுதவியாகப் பார்க்கப்படுகிறது.
அதே சமயம், இத்திட்டத்திற்குப் புதிதாக விண்ணப்பித்துவிட்டு ஒப்புதலுக்காகக் காத்திருப்பவர்களுக்கு உடனடியாக இந்தத் தொகை கிடைக்காது என்பது சற்று ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேர்தல் நடைமுறைகள் மற்றும் நிர்வாக ரீதியிலான சரிபார்ப்புப் பணிகள் காரணமாக, தேர்தல் முடிந்த பிறகும் சில மாதங்கள் தாமதமாகவே இவர்களுக்கான பணிகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. இதனால் புதிய விண்ணப்பதாரர்கள் தங்களின் உரிமைத் தொகையைப் பெற இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
