மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 ஆக உயர்த்தப்படுவது மற்றும் அதன் விரிவாக்கம் எப்போது என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “தொண்டை சரியில்லை” என்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மழுப்பலாகப் பதிலளித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கடுமையான விவாதத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடருக்குள் இது குறித்து நல்ல செய்தி வெளியாகும் என்று இதற்கு முன்பாக சக அமைச்சர்கள் தொடர்ந்து கூறி வந்த நிலையில், நேரடியாக இத்துறையைக் கவனிக்கும் அமைச்சரே பொறுப்பான பதிலை அளிக்காமல் இப்படி அலட்சியமாகப் பேசியிருப்பது பொதுமக்களிடையேயும் நெட்டிசன்களிடையேயும் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.
மக்களின் வாழ்வாதாரத்தோடு தொடர்புடைய முக்கியத் திட்டம் குறித்த கேள்விக்கு மக்கள் பிரதிநிதியான ஒரு அமைச்சர் இன்னும் சற்றுப் பொறுப்புடனும் முதிர்ச்சியுடனும் பதிலளித்திருக்க வேண்டும் என்றும், இந்த தட்டிக்கழிக்கும் போக்கு வாக்களித்த மக்களை ஏளனம் செய்வது போல் உள்ளது என்றும் நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களை சமூக ஊடகங்களில் பரவலாகப் பதிவு செய்து வருகின்றனர்.
