தமிழ்நாடு அரசின் சமூகநலன் மற்றும் பெண்கள் அதிகாரம் அளித்தல் துறை சார்பில் 50 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மற்றும் திருமணமாகாத பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு வரை மாதந்தோறும் ரூ.1000 ஆக இருந்த இந்த ஓய்வூதியத் தொகை, முதலமைச்சர் விஜய் அவர்களால் ரூ.1200 ஆக உயர்த்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி மட்டுமின்றி, பயனாளிகளுக்குப் பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைக் காலங்களில் இலவச சேலை மற்றும் மாதந்தோறும் 2 முதல் 4 கிலோ வரை இலவச அரிசியும் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விண்ணப்பதாரர் 50 வயது பூர்த்தியடைந்த, ஆதரவற்ற மற்றும் திருமணமாகாத பெண்ணாக இருக்க வேண்டும். மேலும், அவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவராகவும், அவரது குடும்பச் சொத்து மதிப்பு ஒரு லட்ச ரூபாய்க்கு மிகாமலும் இருக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கு ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம், குடும்ப அட்டை மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பதற்கான பிபிஎல் எண் போன்ற முக்கிய ஆவணங்கள் அவசியமாகும்.
தகுதியுடைய பெண்கள் இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க, தங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களை அணுகி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அல்லது தங்களின் பகுதிக்குட்பட்ட வருவாய்த் துறை அலுவலகங்கள் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்தும் விண்ணப்பிக்க முடியும்.
