குடும்பத்தில் நேர்ந்த அசம்பாவிதம் காரணமாக, முதன்முறையாக ரயிலில் தனியாகப் பயணம் செய்த 17 வயதுச் சிறுவன் ஒருவனுக்கு, நள்ளிரவில் சக பெண் பயணிகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறித்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனக்காக உறுதிசெய்யப்பட்ட 2AC இருக்கையில் சிறுவன் தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த பெண் ஒருவர், “மேல் இருக்கையில் உள்ள என் தாயாரால் ஏற முடியாது, அதனால் நீ 3AC பெட்டிக்குச் சென்று அட்ஜஸ்ட் செய்துகொள்” எனக் கூறியுள்ளார். அதற்குச் சிறுவன் அமைதியாக மறுத்து, தனது இருக்கையிலேயே அமர்ந்திருக்கப் போவதாகக் கூறியுள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பெண்ணும் அவரது தாயாரும், “இரண்டு பெண்கள் கேட்கும்போது கொஞ்சம் கூட மனிதநேயம் இல்லாமல் நடந்து கொள்கிறாயே!” எனப் பயணிகள் முன்னிலையில் சத்தமிட்டுப் பேசத் தொடங்கியுள்ளனர். தனியாகப் பயணித்த அச்சிறுவன் பயத்தில் கைகள் நடுங்கத் தொடங்கி, நிலைமை புரியாமல் தனது தந்தையை போனில் அழைத்துள்ளான்.
அப்போது அங்கு வந்த மற்றொரு சக பயணி, “தேவையில்லாமல் பிரச்சனை செய்யாதீர்கள், மீண்டும் கத்தினால் உடனடியாக ரயில்வே பாதுகாப்புப் படையை அழைப்பேன்” என எச்சரித்தார். அதன்பின்னரே அந்தப் பெண்கள் அமைதியாயினர். உறுதிசெய்யப்பட்ட இருக்கையை விட்டுத்தர மறுத்ததற்காக ஒரு சிறுவனை மனிதநேயமற்றவன் போலச் சித்தரித்து அச்சுறுத்திய இச்சம்பவம் குறித்து இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
