டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ நடத்திய போராட்டம் மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற நிலையில், இப்போராட்டம் குறித்து பா.ஜ.க அறிவுசார் பிரிவின் முன்னாள் தலைவரான டி.ஜி. மோகன்தாஸ் வெளியிட்ட கருத்துகள் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும் என்றும், போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குறித்து மிகவும் இழிவாகவும் கேவலமாகவும் அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனத்திற்கு உள்ளாகின. அகில இந்திய மாணவர் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அளித்த புகாரின் அடிப்படையில், கேரளாவைச் சேர்ந்த இந்த ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தவாதி மீது திருவனந்தபுரம் சைபர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, கொச்சி மட்டஞ்சேரி கூவபாடத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து டி.ஜி. மோகன்தாஸை காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர் உடனடியாக திருவனந்தபுரம் சைபர் காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். ஜந்தர் மந்தர் போராட்டம் உலக அளவில் கவனம் ஈர்த்து வெற்றியில் முடிந்த சூழலில், போராட்டம் மற்றும் அதில் பங்கேற்ற பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய குற்றத்திற்காக மூத்த வலதுசாரி சித்தாந்தவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
