“கொஞ்சம் வெளியே வாங்க…” நைசாக பேசி அழைத்த 2 பெண்கள்… பகலில் கோர்ட் வாசலில் சபதம்… அடுத்த நொடி நடந்த பகீர் சம்பவம்…!!

By Gayathri on ஐப்பசி 1, 2026

Spread the love

சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த ஏர்டெல் நிறுவன ஊழியரான அஜித் என்பவர் மர்ம நபர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் வீட்டில் இருந்த இவரை, அங்கு வந்த இரண்டு பெண்கள் தனியாகப் பேச வேண்டும் எனக்கூறி வெளியே அழைத்துள்ளனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தாங்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் திடீரென அஜித்தை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதைத் தடுக்க முயன்ற அவரது தாய்க்கும் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அஜித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தாக்குதல் நடத்திய 4 பேரும் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஐஸ்ஹவுஸ் காவல் துறையினர் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர். உயிரிழந்த அஜித்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த அவரது தாயார் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா என்ற கோணத்தில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

   

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளன. அபிஷேக் என்ற நபர் சிறைக்குச் செல்ல அஜித் காரணமாக இருந்ததால், இரு தரப்பிற்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டாகிராமிலும் அஜித்துக்கு வெளிப்படையாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று நீதிமன்றத்திற்கு வந்த அபிஷேக்கின் சகோதரர் ஹரீஷ் என்பவர், அஜித்தை கொல்வதாக நீதிமன்ற வாசலிலேயே சபதம் எடுத்துள்ளார். சபதம் எடுத்த அன்றிரவே, ஹரீஷ் மற்றும் போண்டா ராஜேஷ் ஆகியோர் இணைந்து பெற்றோர் கண்முன்னே இந்த கொடூரக் கொலையை அரங்கேற்றியுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.