சென்னை கோயம்பேடு நியூ காலனியைச் சேர்ந்த பூவரசி என்பவர், கணவர் தீபக்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரைப் பிரிந்து தனது 9 வயது மகன் தருணுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவருடன் பூவரசிக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டுள்ளது. போதைப் பழக்கத்திற்கு அடிமையான தமிழ்செல்வனுக்கும், பூவரசிக்கும் இடையே அடிக்கடி சண்டைகள் வந்தாலும், இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர்.
நேற்று இரவு பூவரசியின் வீட்டிற்கு தமிழ்செல்வன் வந்தபோது இருவருக்கும் இடையே எதிர்பாராத விதமாக கடும் வாக்குவாதம் எழுந்துள்ளது. இதனால் கோபமடைந்த பூவரசி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்த ஆத்திரத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுவன் தருணின் கழுத்தை நெரித்து கொலை செய்த தமிழ்செல்வன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு திரும்பி வந்த தாய், மகன் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோயம்பேடு காவல்துறையினர், சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தகராறில் சிறுவனைக் கொன்றுவிட்டு தலைமறைவாக உள்ள தமிழ்செல்வனைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
