அசாம் மாநிலம் உதால்புரி மாவட்டத்தைச் சேர்ந்த அபிஜித் கிண்டோ மற்றும் மலினி குரியா ஆகிய இருவரும் காதலித்து வந்தனர். மலினி சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், சமீபத்தில் தனது இரு தோழிகளுடன் அசாம் திரும்பினார். அவர்களை வரவேற்பதற்காக ரங்கியா ரயில் நிலையத்திற்குச் சென்ற கிண்டோ, அனைவரையும் அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று தனித்தனி அறைகளை எடுத்துத் தங்க வைத்துள்ளார்.
அன்று நள்ளிரவு மலினியின் அறைக்குச் சென்ற கிண்டோ, அவருக்கு வேறு ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றியதில், தான் மறைத்து வைத்திருந்த கத்தரிக்கோலால் மலினியை சரமாரியாகக் குத்திக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். மறுநாள் காலையில் மலினி போனை எடுக்காததால் சந்தேகமடைந்த தோழிகள் தொடர்புகொண்டபோது, “மலினியைக் கொன்றுவிட்டேன், நானும் தற்கொலை செய்துகொள்ளப் போகிறேன்” என கிண்டோ கூறியதால் அதிர்ச்சியடைந்து ஹோட்டல் நிர்வாகத்திற்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கதவைத் திறந்து பார்த்தபோது, மலினி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதையும், உடலில் காயங்களுடன் கிண்டோ கத்தரிக்கோல் மற்றும் ஸ்க்ரூ டிரைவருடன் அமர்ந்திருப்பதையும் கண்டனர். காயமடைந்த கிண்டோவை மருத்துவமனையில் சேர்த்த போலீஸார், மலினியைச் சென்னையிலேயே கொலை செய்யத் திட்டமிட்டதாக அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்தனர். தடயவியல் நிபுணர்கள் ஹோட்டல் அறையில் சோதனையிட்டு தடயங்களைச் சேகரித்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
