உத்தரப் பிரதேசம் மாநிலம் கிரேட்டர் நோயிடா மேற்கிலுள்ள ஒரு குடியிருப்பு வளாகத்திற்கு ஆன்லைன் மூலம் உணவு விநியோகம் செய்ய வந்த நபர் ஒருவரை, வழக்கம் போல் பாதுகாப்புப் பணியாளர்கள் நுழைவு வாயிலில் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் குடியிருப்பாளர் உடனடியாக வாயிலுக்கு வந்து பாதுகாப்புப் பணியாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுவே பின்னர் இரு தரப்பினருக்கும் இடையே பெரிய மோதலாக வெடித்தது.
இந்த மோதலின் போது அந்தப் பெண் காவலாளிகளை கடுமையான வார்த்தைகளால் திட்டியும், அச்சுறுத்தும் வகையிலும் நடந்துகொண்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது. குறிப்பாக, “உன் தகுதி என்ன? உன்னை என் காலணி துடைக்க வைப்பேன்” என்று காவலாளிகளை இழிவாகப் பேசியும், அவர்களைத் தாக்க முயன்றதும் இக்காணொளியில் பதிவாகியிருந்தது. மேலும், காவல்துறையை அழைக்குமாறு காவலாளிகளைப் பார்த்து அவர் சவால் விடும் காட்சிகளும் அதில் இடம்பெற்றிருந்தன.
சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தக் காணொளியைக் கவனித்த பிஸ்ராக் காவல் நிலைய அதிகாரிகள், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு விநியோக நபரைத் தடுத்தது மற்றும் பெண் காவலாளிகளை அச்சுறுத்தியது தொடர்பான சூழ்நிலைகளை ஆராய்ந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
