உத்தரப் பிரதேச மாநிலம் புலந்தஷாரில், தினமும் குடித்துவிட்டு தகராறு செய்துவந்த கணவனை மனைவியே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஹ்லிம்புரா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (36) என்பவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உயிரிழந்துவிட்டதாக, அவரது மனைவி ப்ரீத்தி குமாரி (35) அவசர உதவி எண்ணான 112-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் உடலைக் கைப்பற்றி தீவிர சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.
காவல்துறையின் தீவிர விசாரணையில், கிருஷ்ண குமார் மதுபோதையால் இறக்கவில்லை என்பதும், மனைவியே அவரைக் கொலை செய்ததும் அம்பலமானது. கணவர் தினமும் மது அருந்திவிட்டு வந்து தன்னைக் கொடூரமாகத் தாக்கி தகராறு செய்துவந்ததால், ஆத்திரத்தில் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றதாக ப்ரீத்தி குமாரி காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து அவரை உடனடியாகக் கைது செய்த காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
