கான்பூரைச் சேர்ந்த ஒரு பெண், தனது திருமண நகைகள் மற்றும் குடும்பத் தங்கம் உட்பட ரூ 50 லட்சம் மதிப்பிலான பொருட்களை 2003-ஆம் ஆண்டு முதல் எஸ்பிஐ வங்கி லாக்கரில் வைத்திருந்தார். கணவர் மறைவுக்குப் பிறகு அவர் தனது மகளின் வீட்டிற்குச் சென்றபோதிலும், வங்கி தொடர்ந்து லாக்கர் கட்டணத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருந்தது. ஆனால், ஜூலை 2026-இல் அவர் தனது லாக்கரைச் சரிபார்க்கச் சென்றபோது, “உங்களுக்கு இங்கு லாக்கரே இல்லை” என்று வங்கி அதிகாரி கூறி அதிர்ச்சியளித்துள்ளார்.
அதன் பிறகு நடைபெற்ற தேடுதலில் லாக்கர் எண் 23 கண்டுபிடிக்கப்பட்டது; ஆனால் அது முற்றிலும் காலியாக இருந்தது. வங்கிப் பதிவுகளின்படி, 2020-ஆம் ஆண்டில் அந்த லாக்கர் இரண்டு முறை திறக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால் அதை யார் திறந்தது என்ற விவரம் வெளிவரவில்லை. தற்போது இது தொடர்பாக எஸ்பிஐ வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
நமது வாழ்நாள் சேமிப்பைப் பாதுகாப்பாக வைக்கும் வங்கிகளிலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது பெரும் கவலையளிக்கிறது. வங்கி தொடர்ந்து லாக்கர் கட்டணத்தைப் பிடித்துக்கொண்டிருந்தாலும், நமது பொருட்கள் பத்திரமாக இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்பது அவசியமாகிறது. எனவே, நீங்களும் நீண்ட நாட்களாக உங்கள் வங்கி லாக்கரைச் சரிபார்க்காமல் இருந்தால், தாமதிக்காமல் உடனே சென்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
