பரேலியைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞருக்கு அம்ரிதா கவுர் (24) என்ற பெண் தவறான அழைப்பு மூலம் அறிமுகமாகியுள்ளார். நாளடைவில் இருவரிடமும் நட்பு ஏற்பட்டு நெருக்கமாகப் பேசி வந்துள்ளனர். இந்நிலையில், அம்ரிதா அந்த இளைஞரை வீடியோ காலில் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். காதல் மயக்கத்தில் அபிஷேக்கும் வீடியோ காலில் பேசியபோது, ஆடையின்றி வரச்சொல்லி அதனை இளைஞருக்குத் தெரியாமல் ரகசியமாக ஸ்கிரீன் ரெக்கார்ட் செய்துள்ளார். அந்த வீடியோவை வைத்து அபிஷேக்கை மிரட்டி முதற்கட்டமாக ரூ.2 லட்சம் வரை பணம் பறித்துள்ளார்.
மேலும் பணம் கேட்டு மிரட்டியதுடன், பணத்தைத் தராவிட்டால் பொய்யான பாலியல் பலாத்கார வழக்கில் சிக்க வைத்துச் சிறைக்கு அனுப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட அபிஷேக் பிரேம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், சாட்டிலைட் பேருந்து நிலையம் அருகே இருந்த அம்ரிதா கவுரை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் பேராசை காரணமாகவே இக்குற்றத்தில் ஈடுபட்டதாக அந்தப் பெண் போலீசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
