கர்நாடக மாநிலம் மால்பே பகுதியைச் சேர்ந்த 41 வயதான பிரபல தொழிலதிபர் சந்தீப் சாலியன், நீர் விளையாட்டு உபகரணங்களை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தனது நண்பர்களுடன் கோவாவிற்கு சுற்றுலா சென்ற அவர், அங்குள்ள கலங்குட் பகுதியில் உள்ள ஒரு சொகுசு லாட்ஜில் தங்கியிருந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தனது அறையில் அவர் திடீரென மயங்கிக் கிடந்துள்ளார். உடனே அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். ஆரம்பத்தில் இது சாதாரண மாரடைப்பு மரணம் என்றுதான் கருதப்பட்டது.
ஆனால், சந்தீப் சாலியன் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மற்றும் கையில் இருந்த தங்கக் காப்பு ஆகியவை மாயமாகியிருந்ததை போலீசார் கவனித்தனர். இதனால் மரணத்தில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து, லாட்ஜில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, சந்தீப் சாலியனுடன் ஒரு பெண் லாட்ஜ் அறைக்குள் நுழைவதும், நள்ளிரவில் அந்தப் பெண் மட்டும் தனியாக அறையை விட்டு வெளியேறிச் செல்வதும் பதிவாகியிருந்தது. இந்த ஆதாரத்தை வைத்து சைபர் பிரிவு போலீசாரின் தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் செல்போன் எண்ணைக் கொண்டு நடத்திய விசாரணையில், அந்தப் பெண் பெங்களூருவைச் சேர்ந்த அக்ஷதா (40) என்பது தெரியவந்தது.
இதையடுத்து கர்நாடக போலீசாரின் உதவியுடன் கோவா போலீசார் அக்ஷதாவை அதிரடியாகக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய மும்முரமான விசாரணையில், அவர் பல பெயர்களில் தனது அடையாளங்களை மாற்றி, பணக்காரர்களை மட்டுமே குறிவைத்து கொள்ளையடிக்கும் கும்பலுடன் தொடர்பில் இருந்தது வெளிவந்தது. கோவாவில் உள்ள சூதாட்ட விடுதிகளுக்கு (Casino) வரும் வசதியான தொழிலதிபர்களுடன் பழகி, அவர்களை ஸ்டார் ஹோட்டல்களுக்கு அழைத்துச் செல்வதை அக்ஷதா வழக்கமாகக் கொண்டுள்ளார். அங்கு அவர்களுக்கு பாலியல் ஆசை காட்டி, அவர்கள் குடிக்கும் குளிர்பானங்களில் அதிக அளவு மயக்க மருந்தை கலந்து கொடுத்து, அவர்கள் மயங்கியவுடன் நகைகளையும் பணத்தையும் கொள்ளையடித்து எஸ்கேப் ஆகிவிடுவது அவரது பாணியாகும்.
இதுகுறித்து கோவா போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி அமோன்கர் கூறும்போது, “அக்ஷதா இதற்கு முன்பும் குஜராத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்கு இதேபோல் மயக்க மருந்து கொடுத்து, ரூ.2.40 லட்சம் மதிப்புள்ள நகைகளைத் திருடிய வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளிவந்தவர். ஆனால், இந்த முறை சந்தீப் சாலியனுக்கு அவர் கொடுத்த மயக்க மருந்தின் அளவு (Dosage) அதிகமாக இருந்ததால், அதுவே அவரது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிட்டது” என்றார். லாட்ஜில் சாதாரண திருட்டு வழக்காகத் தொடங்கப்பட்ட இந்த விவகாரம், தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள அக்ஷதாவை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் கோவாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
