உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏழை மாணவி ஒருவர், தீவிர கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையைக் காப்பாற்ற நிதியுதவி கோரி வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
அந்த மாணவியின் தந்தை கடந்த 3 ஆண்டுகளாக ‘கல்லீரல் அழற்சி’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். குடும்பத்தின் ஒரே வாழ்வாதாரமாக இருந்த தந்தையின் சிகிச்சைக்காகச் சிறுகச் சிறுகச் சேர்த்த அனைத்துச் சேமிப்புப் பணமும் செலவாகிவிட்டது. தற்போது மருத்துவர்கள் உடனடியாகக் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அதற்குச் சுமார் 30 முதல் 35 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.
ஆண் வாரிசு இல்லாத அந்தக் குடும்பத்தில், மாணவி டியூஷன் வகுப்புகள் எடுத்து வரும் வருமானத்தைக் கொண்டு படிப்பையும் குடும்பச் செலவுகளையும் கவனித்து வருகிறார். தந்தையின் அறுவைசிகிச்சைக்கு அவ்வளவு பெரிய தொகையைத் திரட்ட முடியாத நிலையில், உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் ‘பிசிக்ஸ் வாலா’ நிறுவனர் அழக பாண்டே ஆகியோருக்கு அந்த மாணவி கண்ணீருடன் நிதியுதவி கோரிக்கை விடுத்துள்ளார்.
