விழுப்புரம் மாவட்டம் குறிஞ்சம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி விருத்தம்மாள். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழனிவேல் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயக்கொடி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஜெயக்கொடி பழனிவேல் தம்பதிக்கு பூபாலன்(20) என்ற மகனும் புவனா(18) என்ற மகளும் உள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பழனிவேல் உயிரிழந்த நிலையில் ஜெயகொடி தனது பிள்ளைகளுடன் தனியாக வாழ்ந்து வந்தார். நேற்று வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் ஜெயக்கொடியின் தலையில் பலமாக தாக்கி தரதரவனை இழுத்து சென்றனர். அப்போது ஜெயக்கொடியின் மூளை சிதறி விவசாய நிலத்தில் விழுந்த நிலையில், அவரது உடலை கல்லில் கட்டி கிணற்றில் தூக்கி வீசிவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயக்கொடியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சொத்து பிரச்சினை காரணமாக அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
