ஈரோடு மாவட்டம் பெருந்துறை காசி பில்லாம்பாளையத்தில் வசித்து வந்த ஸ்ரீதர் என்பவரின் மனைவி பரிமளா. ஸ்ரீதருக்கு, மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஓட்டுநரான கார்த்திகேயன் என்பவருடன் நட்பு ஏற்பட்டது. கார்த்திகேயன் ஸ்ரீதரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதால், ஸ்ரீதரின் மனைவி பரிமளாவுக்கும் அவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்தது.
மதுப் பழக்கத்திற்கு அடிமையான ஸ்ரீதர், கார்த்திகேயனுடன் சேர்ந்து வீட்டிலேயே மது அருந்துவது வழக்கம். அப்படி ஒரு நாள் இருவரும் மது அருந்தியபோது, போதையில் ஸ்ரீதர் மயங்கிக் கிடந்ததால், பரிமளாவும் கார்த்திகேயனும் அறையில் உல்லாசமாக இருந்துள்ளனர். மயக்கம் தெளிந்த ஸ்ரீதர் இதைக் கண்டு கோபமடைந்ததால், அவரைக் சமாதானம் செய்வதாகக் கூறி, கள்ளக்காதலன் கார்த்திகேயன் அவரை ஈங்கூர் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு, தான் வைத்திருந்த கருப்பு டீ சர்ட்டைப் பயன்படுத்தி ஸ்ரீதரின் கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பரிமளாவுடன் சேர்ந்து ஸ்ரீதரின் உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி, வாய்க்கால் மேட்டில் உள்ள புதர் பகுதியில் மறைத்து வைத்துவிட்டு ஈரோட்டிலிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
சாக்கு மூட்டையிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அப்பகுதி மக்கள் போலீஸாருக்குத் தகவல் அளித்தனர். மூட்டையை அவிழ்த்துப் பார்த்தபோது ஸ்ரீதர் இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், ஸ்ரீதரை இருவரும் சேர்ந்து கொலை செய்ததாகப் பரிமளா மற்றும் கார்த்திகேயன் ஒப்புக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கார், இருசக்கர வாகனம், டீ சர்ட் உள்ளிட்ட பொருட்களைப் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர். இந்தக் கள்ளக்காதல் கொலைச் சம்பவம் ஈரோட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
