உத்திரப்பிரதேச மாநிலம் பதாவுன் பகுதியில், மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு பைக்கில் குடும்பத்தினருடன் திரும்பியவர்கள் மீது அதிவேகமாக வந்த பிக்கப் வேன் மோதிய விபத்தில் இளம்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பதாவுனைச் சேர்ந்த பிகாம் என்பவர் தனது மனைவி குஷி மற்றும் மனைவியின் தங்கை கிரண் ஆகியோருடன் பில்சி பகுதியில் சிகிச்சை பெற்றுவிட்டு பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தபோது, உகைதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பதாவுன் – பிஜ்நூர் தேசிய நெடுஞ்சாலையில் பின்னால் வந்த பிக்கப் வேன் ஒன்று மோதியுள்ளது.
நிலைதடுமாறிய பைக் முன்னால் நின்றுகொண்டிருந்த இயந்திரத்தின் மீது மோதியதில் கிரண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிகாமும் அவரது மனைவியும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பதாவுன் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
