“என் குழந்தைங்க பசியால வாடுறாங்க” பிளீஸ் திருப்பி கொடுங்க.. இல்லனா போலீஸ் நிலையம் முன் மது விற்பேன்… அதிகாரிகளின் காலில் விழுந்து கதறிய பெண்..!!

By Soundarya on வைகாசி 2, 2026

Spread the love

அகமதாபாத் நகரில் கணவனை இழந்த ஒரு ஏழைப் பெண், தனது வாழ்வாதாரத்திற்காக வீதியில் பழங்களை விற்று வந்துள்ளார். அவரது தள்ளுவண்டியை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து, கடந்த இரண்டு மாதங்களாகத் திருப்பித் தராமல் வைத்துள்ளனர். தனது வண்டியை மீட்பதற்காக மாநகராட்சி அலுவலகத்திற்குச் சென்று அவர் விடுத்த கோரிக்கைகளை அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

அப்போது அந்தப் பெண் கண்ணீர் மல்கக் கூறிய வார்த்தைகள் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. “எனது குழந்தைகள் பசியால் வாடுகிறார்கள், தயவுசெய்து எனது வண்டியைத் திருப்பித் தாருங்கள். இல்லையெனில் நான் எதற்கும் துணிய வேண்டியிருக்கும். நீங்கள் வண்டியைத் தரவில்லை என்றால், நாளை முதல் காவல் நிலையம் அருகிலேயே அமர்ந்து மது விற்கத் தொடங்கிவிடுவேன்” என்று ஆவேசத்துடன் கூறியுள்ளார். ஆனால் அங்கிருந்த ஒரு அதிகாரி, விதிகளின்படி உரிய காலம் வரும்போதுதான் வண்டி ஒப்படைக்கப்படும் என்று கறாராகப் பதிலளித்துள்ளார்.

   

அதற்கு அந்தப் பெண், “நான் அபராதம் கட்டத் தயாராக இருக்கிறேன். நீங்கள் எனது வீட்டிற்கு வந்து பாருங்கள், நான் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். அக்கம் பக்கத்தினர் கொடுக்கும் மீந்துபோன உணவைத்தான் எனது குழந்தைகள் சாப்பிடுகிறார்கள்” என்று கதறியுள்ளார். ஏற்கனவே அன்றாட வாழ்க்கைக்காகப் போராடும் ஏழை மக்களின் வாழ்வை அரசாங்கம் மேலும் கடினமாக்கக் கூடாது. இத்தகைய எளிய மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு உரிய தீர்வுகளைக் காண வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.