கர்நாடகாவில் பெண் நடத்துனரை பயணி ஒருவர் தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா கதக்கில் உள்ள சுங்கச்சாவடி அருகே அந்த பகுதியை சேர்ந்த சிலர் பேருந்துக்காக காத்திருந்தனர். நீண்ட நேரமாக காத்திருந்தும் தேசிய நெடுஞ்சாலை வழியாக பேருந்து எதுவும் வரவில்லை. பிறகு அந்த வழியாக வந்த அரசு பேருந்தை நிறுத்தியுள்ளனர். பேருந்தை நிறுத்திய ஓட்டுனர் பயணிகளை ஏன் வண்டியை தடுத்தீர்கள் என்று திட்டியுள்ளார். அதற்கு பேருந்தில் இடம் இருக்கும்போது தங்களை ஏற்றிச் சென்றால் என்ன என்று ஒருவர் கேட்டு உள்ளே ஏறி உள்ளார். உடனே பேருந்தில் இருந்த பெண் நடத்துனர் கண்ட இடத்தில் எல்லாம் பேருந்தை நிறுத்த முடியாது என்று பேசி உள்ளார்.
ஆனால் அங்கிருந்த பயணிகள் எதையும் கண்டுகொள்ளாமல் பேருந்துக்குள் ஏற முயன்றனர். நடத்துனர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பயணி ஒருவர் நடத்துனரின் கன்னத்தில் பளார் என்று அறைந்தார். தன்னை தாக்கிய நபரை பதிலுக்கு நடத்துணரும் அறைந்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் பணியில் இருந்த பெண் நடத்துனரை தாக்கிய வரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
