“என்னிடம் விசாரணையே பண்ணல.. அப்புறம் எப்படி MLA நிரபராதி?”…. சட்டமன்றத்தில் புஸ்ஸி ஆனந்த் சொன்ன பதிலால் வெடித்த தவெக பெண் நிர்வாகி….!

By Nanthini on புரட்டாதி 6, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் மீது எந்தத் தவறும் இல்லை என புலன் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் சட்டமன்றத்தில் தெரிவித்திருந்தார். சட்டமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் நீர்வளத்துறை அமைச்சரும் தவெக பொதுச்செயலாளருமான புஸ்ஸி ஆனந்த் இந்த விளக்கத்தை அளித்தார். ஆனால், இந்த விளக்கம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

   

அமைச்சரின் இந்த பேச்சுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்ட பெண் நிர்வாகி, “நான் அளித்த புகார் மனு தொடர்பாக இதுவரையிலும் என்னிடம் எந்தவிதமான புலன் விசாரணையும் நடத்தப்படவில்லை” என பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். புகார் அளித்த நபரிடமே விசாரணை நடத்தாதபோது, எந்த அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் குற்றமற்றவர் என்று அமைச்சர் கூறுகிறார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சட்டமன்ற உறுப்பினர் என்பதால் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் அவரது பெயரை முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்கவில்லை என்றும் அவர் அடுக்கடுக்கான புகார்களைச் சுமத்தியுள்ளார்.

தான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஆட்சியர் மற்றும் நீதிமன்ற வாக்குமூலம் வரை சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. சரவணனின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும், அவருக்கு இந்தச் சம்பவத்தில் முழு உடந்தை உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணை ஒருதலைப்பட்சமாக நடப்பதாகக் கூறிய அப்பெண், எம்.எல்.ஏ-வின் ஆதரவாளர்கள் தனது புகைப்படங்கள் மற்றும் சமூக வலைதளப் பதிவுகளை வெளியிட்டுத் தன்னைக் கொச்சைப்படுத்தி வருவதாகவும், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றும் ஆவேசமாக வினவினார்.

   

தமக்காகத் தொடர்ச்சியாகச் குரல் கொடுத்து வரும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், வரவிருக்கும் சட்டமன்றக் கூட்டத்திலும் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். மேலும், “கட்சியில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகக் கூறும் தவெக தலைவர் விஜய், இந்த வழக்கை நேரடியாகத் தலையிட்டு ஆய்வு செய்ய வேண்டும்; எனக்கும் நியாயமான நல்ல தீர்ப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உருக்கமாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.