மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் டோம்பிவ்லி பகுதியில், தொடர் தொல்லை கொடுத்துவந்த கள்ளக்காதலனைக் கணவருடன் சேர்ந்து பெண் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு நாட்களாகப் பூட்டப்பட்டிருந்த வாடகை வீட்டிலிருந்து வீசிய கடுமையான துர்நாற்றம் காரணமாக, வீட்டு உரிமையாளர் வாடகைக்கு இருந்த தம்பதியைத் தொடர்புகொள்ள முயன்றுள்ளார். அப்போது, அந்தப் பெண் உரிமையாளருக்கு அனுப்பிய குரல் பதிவில், தன்னை நீண்டநாட்களாகத் துன்புறுத்திவந்த காதலனைக் கணவருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டதாக அதிர்ச்சிகரமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மன்பாடா காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து அழுகிய நிலையிலிருந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலத்தைக் கைப்பற்றினர். கொலையை மறைப்பதற்காகக் கழிவறை குழாயைத் திறந்துவிட்டும், சத்தம் வெளியே தெரியாமல் இருக்கச் சுற்றுப்புறத்தில் தொடர்ந்து சத்தம் எழும்பும் வகையிலும் அத்தம்பதியினர் திட்டம் தீட்டிச் செயல்பட்டுவிட்டுத் தலைமறைவாகியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 103-ன் (கொலை வழக்கு) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், பிரேதப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் விசாரணையைத் தீவிரப்படுத்தி, தப்பியோடிய தம்பதியைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
