அதிமுக ஆட்சி அமைக்க திமுக ஆதரவளிக்க முன்வந்ததாக அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் பேசியிருப்பது தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்த ஆதரவு முயற்சியை திமுக இளைஞரணிச் செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னெடுத்ததாகவும், ஆனால் அதிமுக அந்த யோசனையை ஏற்க மறுத்துவிட்டதாகவும் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
“அதிமுக ஆட்சி அமைய திமுக ஆதரவு அளிக்க முன்வந்தது மறுக்க முடியாத உண்மை” என்று அதிமுக மேடையிலேயே அவர் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏனெனில், திமுகவுடன் அதுபோன்ற எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக மறுத்து வரும் நிலையில், அவருக்கு நேர்மாறாகக் கட்சியின் மூத்த தலைவரே இவ்வாறு பேசியிருப்பது அதிமுகவின் உட்கட்சிப் பூசலையும், தலைவர்களுக்கிடையேயான முரண்பட்ட கருத்துகளையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
