“இது என்னோடது நீங்க எப்படி எடுக்கலாம்…” பாட்டியை குழப்பி விட்டு தகராறு செய்த பெண்கள்… அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 17, 2025

Spread the love

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியைச் சேர்ந்தவர் பச்சையம்மாள் (60). மூட்டு வலியால் பாதிக்கப்பட்ட பச்சையம்மாள் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஆரணி மண்டி வீதியில் உள்ள ஆயுர்வேத மருத்துவமனைக்கு மருந்து வாங்க வந்திருந்தார். அப்போது, எதிரே வந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், கீழே மணிபர்ஸ் கிடப்பதாகக் கூறி பச்சையம்மாளைக் கீழே குனிந்து அதை எடுக்கச் செய்தார்.

பச்சையம்மாள் அதை எடுத்துப் பார்த்தபோது, மற்றொரு பெண் அங்கே வந்து, “இது என்னுடையது, நீ எப்படி எடுத்தாய்?” என்று தகராறு செய்துள்ளார். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அந்த இரண்டு பெண்களும் பச்சையம்மாளின் கழுத்தில் இருந்த தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

   

இதுகுறித்து பச்சையம்மாள் அளித்த புகாரின் பேரில், ஆரணி நகர போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்து, குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நேத்ராகிட்டப்பா (34) மற்றும் அஞ்சலா ஆகியோர் இந்தச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

   

போலீசார், நேத்ராகிட்டப்பாவைக் கைது செய்து, அவரிடமிருந்து இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறிமுதல் செய்தனர். ஏற்கனவே கர்நாடகாவில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவரான நேத்ராகிட்டப்பா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். தலைமறைவாக உள்ள அஞ்சலாவைத் தனிப்படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.