சென்னை துரைப்பாக்கம் பகுதியில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் பெண்ணின் வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்த 52 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெருங்குடி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த இப்பெண், தனது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வரும் நிலையில், இவரது வீட்டிற்கு எதிரே வசிக்கும் அல்தாப் 52 என்பவர் கடந்த சில நாட்களாக இவரைத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று பெண் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட அல்தாப், கதவைத் திறந்து படுக்கையறைக்குள் நுழைந்து அவரது கையைப் பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார்.
இந்த எதிர்பாராத தாக்குதலால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், சற்றும் தாமதிக்காமல் தான் முன்னதாகவே பாதுகாப்பிற்காக வைத்திருந்த மிளகாய்த்தூளை அல்தாப்பின் கண்ணில் வீசி சாதுரியமாக தப்பியுள்ளார். கண்கள் எரிந்து நிலைகுலைந்த அல்தாப் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக தனது கணவர் மற்றும் உறவினர்களிடம் நடந்த விவரங்களை கூறி துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். புகாரின் பேரில் விரைந்து செயல்பட்ட காவல்துறையினர், அல்தாப்பைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
