ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில், 65 வயது மதிக்கத்தக்க தனியார் மருத்துவரிடம் இருந்து சுமார் 2 கோடி ரூபாய் மிரட்டிப் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில், கம்லேஷ் என்ற செவிலியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு ஊடகங்களிடம் பேசிய அந்த செவிலியர், மருத்துவர் மீது பகீர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அந்த மருத்துவர் ஒரு “தொடர் பாலியல் குற்றவாளி” என்றும், கடந்த பல ஆண்டுகளாக மருத்துவமனைக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட பெண் நோயாளிகளை அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியதுடன், தமக்கு எதிரான வழக்கு அந்த உண்மைகளை மூடிமறைக்க புனையப்பட்ட பொய் வழக்கு என்றும் வாதிட்டுள்ளார்.
இதற்கு மாறாக, மருத்துவர் அளித்த புகாரில், கடந்த 2016 முதல் தனது மருத்துவமனையில் இரவுப் பணி செவிலியராகப் பணிபுரிந்து வந்த கம்லேஷ், தனது தனிப்பட்ட புகைப்படங்களைத் திருடி சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியும், பொய்யான பலாத்கார வழக்கில் சிக்கவைப்பதாக அச்சுறுத்தியும் பல ஆண்டுகளாகப் பணம் பறித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பளத்தைத் தாண்டி வங்கிப் பரிமாற்றம் மற்றும் காசோலைகள் மூலம் சுமார் 2 கோடி ரூபாய் வரை அவர் வசூலித்துள்ளதாகவும், தன்னைத் தொடர்ந்து கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்திருந்ததாகவும் மருத்துவர் தனது புகாரில் விவரித்துள்ளார்.
தற்போது இந்தச் சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவர் மீது செவிலியர் முன்வைத்துள்ள பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் குறித்தும், செவிலியர் மீது மருத்துவர் தொடுத்துள்ள பணம் பறிப்பு மற்றும் மிரட்டல் வழக்கு குறித்தும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். டிஜிட்டல் ஆதாரங்கள், வங்கிப் பதிவுகள் மற்றும் கைபேசித் தரவுகளை ஆய்வு செய்து வரும் அதிகாரிகள், அனைத்துச் சான்றுகளையும் சேகரித்த பின்னரே அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
