ஹரியானா மாநிலம் குருகிராம் சோனா அருகிலுள்ள டோலா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவருடைய மனைவி நீது (34). பிரசாந்த் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் நிலையில், சம்பவத்தன்று காலை தன் குழந்தைகளுடன் பள்ளிக்குச் சென்றுவிட்டு மதியம் சுமார் 2 மணியளவில் வீடு திரும்பியுள்ளார். அப்போது வீடு முழுவதும் பொருட்கள் சிதறிக்கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், வீட்டைச் சோதனையிட்டபோது குளியலறையில் தனது மனைவி நீது கைகள் கட்டப்பட்ட நிலையிலும், முகம் டேப்பால் மூடப்பட்ட நிலையிலும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு பதறிப்போயுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தனது மனைவியை உடனடியாக மீட்டு சோனாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு பிரசாந்த் விரைந்து கொண்டு சென்றுள்ளார். இருப்பினும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். வீட்டில் பொருட்கள் சிதறிக் கிடந்த காட்சியானது, இது ஒரு கொள்ளை முயற்சியின் போது நடந்த கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு விசாரணையைத் தொடங்கினர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்கான உண்மையான காரணம் என்ன, வீதியிலிருந்து ஏதேனும் பொருட்கள் திருடப்பட்டுள்ளதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றவாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
