ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடுப்பல்லி மண்டலத்திற்குட்பட்ட மல்லப்பா கொண்டா பகுதியில் செவ்வாய்க்கிழமை அன்று இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. தமிழ்நாடு சூளகிரி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும், சாந்திபுரம் மண்டலம் போயனப்பள்ளியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரமேஷின் மனைவி போயனப்பள்ளியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார்.
மனைவி மற்றும் குழந்தையைக் காண்பதற்காக ரமேஷ் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார். அதன்பின், தம்பதியினர் இருவரும் தங்களது குழந்தையுடன் மோட்டார் சைக்கிளில் மல்லப்பா கொண்டாவில் உள்ள மல்லேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சென்றுள்ளனர். சாமி தரிசனம் முடித்துவிட்டு மலையிலிருந்து கீழே இறங்கி வரும்போது, மூன்றாவது வளைவு அருகே மர்ம நபர்களால் ரமேஷ் மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். கணவர் கொலை செய்யப்பட்ட பிறகு, அங்கிருந்த அவரது மனைவியும் குழந்தையும் மாயமாகினர்.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையைத் தொடங்கினர். ஆரம்பத்தில் இது சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. எனினும், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தபோது, ரமேஷின் மனைவி தனது கள்ளக்காதலன் மற்றும் மேலும் இரு இளைஞர்களுடன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கள்ளக்காதல் மோகத்தால் கணவரைக் கோயிலுக்கு அழைத்துச் சென்று திட்டமிட்டு கொலை செய்த அந்தப் பெண்ணையும் அவரது கூட்டாளிகளையும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
