தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த பரபரப்பான நகர்வுகளைச் சந்தித்து வரும் வேளையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளரும் மூத்த நிர்வாகியுமான S.R.S. இப்ராஹிம், நடிகர் விஜய் தலைமையிலான ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாகச் செய்தி தொடர்பாளராகவும், மண்டலப் பொறுப்பாளராகவும் தீவிரமாகச் செயல்பட்டு வந்த அவர், கட்சியின் சில இரட்டை நிலைப்பாடுகளால் அண்மையில் கடும் அதிருப்தி அடைந்தார். இதன் காரணமாக தனது அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகிய அவர், தற்போது தவெகவின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அக்கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் முன்னிலையில் முறைப்படி தவெகவில் இணைந்தார். அவருக்குக் கட்சியின் சார்பில் சால்வை அணிவித்து, உறுப்பினர் அட்டை வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த S.R.S. இப்ராஹிம், லஞ்சம்-ஊழல் ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு, சிறுபான்மையினர் பாதுகாப்பு என ஒட்டுமொத்த மக்களுக்குமான ஒரு “மக்கள் மாடல்” அரசாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது என்று புகழாரம் சூட்டினார். கட்சியின் இந்தத் தூய்மையான கொள்கைகளும், மக்கள் நலன் சார்ந்த தொலைநோக்குப் பார்வையுமே தன்னை இந்த முடிவை நோக்கி நகர்த்தியதாகக் குறிப்பிட்ட அவர், தவெகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க இனிவரும் காலங்களில் முழு மூச்சாகப் பணியாற்றப் போவதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மூத்த நிர்வாகி ஒருவரின் இந்த வரவு, தமிழக அரசியல் வட்டாரத்திலும் தவெக தொண்டர்கள் மத்தியிலும் பெரும் சுறுசுறுப்பை ஏற்படுத்தியுள்ளது.
