புதுக்கோட்டை மாவட்டம் மல்லாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேலு(55). இவரது மனைவி மகாலட்சுமி(45). இந்த தம்பதியினருக்கு தமிழ்ச்செல்வி(26), சாரதா(20) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் பழனிவேலு அடிக்கடி தனது மனைவி மீது சந்தேகப்பட்டு குடும்பத்தினருடன் சண்டை போட்டு வந்தார். கடந்த மாதம் முதல் பழனிவேலு திடீரென காணாமல் போனதால் உறவினர்கள் மகாலட்சுமியிடம் கேட்டனர்.
பழனிவேலுக்கு கொழுப்பு கட்டிகள் இருந்ததால் அதற்கு சிகிச்சை பெறுவதற்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் தங்கி இருப்பதாக மகாலட்சுமி கூறியுள்ளார். ஆனால் 50 நாள் கழித்தும் பழனிவேல் ஊருக்கு வராமல் யாரையும் செல்போன் மூலம் தொடர்பு கொள்ளாமல் இருந்ததால் சந்தேகமடைந்த பழனி வேலுவின் சகோதரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
கடந்த மாதம் பழனிவேலு தனது மனைவி மற்றும் மகளுடன் வழக்கம் போல சண்டை போட்டுள்ளார். அப்போது கோபத்தில் மகாலட்சுமி தனது மகள்களுடன் சேர்ந்து பழனிவேலுவை தாக்கியுள்ளார். அப்போது படக்கூடாது இடத்தில் பட்டு பழனிவேலு உயிரிழந்தார். பின்னர் என்ன செய்வது என்று தெரியாமல் அவரது உடலை குழி தோண்டி புதைத்ததாக மகாலட்சுமி கூறியுள்ளார். இதனால் பழனிவேலுவின் மனைவி மகாலட்சுமி, மகள்கள் தமிழ்ச்செல்வி, சாரதா ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
